இலங்கையின் எந்தவொரு மாவட்டத்திலும் இப்படியொரு பரபரப்பை உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் ஏற்படுத்தியதில்லை. மாறாக இம்முறை நடக்கவிருக்கின்ற மட்டக்களப்பு உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இலங்கை அரசியல் கட்சிகளிடையே மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் கூடிய கவனத்தை ஈர்த்திருக்கின்றது. ஆரம்பத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என ஒருசாராரும், நடத்தப்பட கூடாது என இன்னுமொருசாராரும் முனைப்புக்காட்டி வந்தனர். தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா? என்கின்ற நிலைமையையிட்டு முடிவெடுக்கப்பட முன்னரே தேர்தல் நடக்கின்ற பட்சத்தில் அதனைக் கண்காணிக்கத் தயாராயிருப்பதாக "போப்ரல்" அமைப்பும் தன் பங்கிற்கு அறிக்கை விட்டிருந்தது.
இவ்வனைத்து பிரிவினரும் மட்டக்களப்பில் நடத்தப்படவிருக்கும் இத்தேர்தலை ஒட்டி இவ்வளவு சிரத்தைகொள்ளக் காரணமென்ன என்ற கேள்வியில்தான் எல்லாவிதமான அரசியல் சூட்சுமங்களும் அடங்கியிருக்கின்றன. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முனைப்புக் காட்டுவோராக ரி.எம்.வி.பி. யினரும், அரசு தரப்பினருமே திகழ்கின்றனர். அரசைப் பொறுத்தவரை கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்துவிட்ட நிலையில் அங்கு ஏற்பட்டிருக்கும் அதிகார வெற்றிடத்தை ஜனநாய வழிக்குத் திரும்பியுள்ள அரசியல் சக்திகளைக் கொண்டு நிரப்பிவிட வேண்டும் என்ற எத்தனிப்பு காணப்படுகின்றது. ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ள மாற்று இயக்கங்களுக்கு ஆட்சி, அதிகாரங்களில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும், அதனூடாக கிழக்கில் ஒரு சிவில் சூழலை ஏற்படுத்துவதினூடாக சர்வதேச ரீதியில் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து வெளிக்காட்டவும் இத்தேர்தல்களை அரசு பயன்படுத்தக்கூடும்.
தேர்தலை வரவேற்கின்ற ரி.எம்.வி.பி. எனும் புதிய அரசியல் அமைப்பானது தங்களது ஆதரவுத் தளத்தினை நாடிபிடித்துப்பார்ப்பதற்கான நல்ல தருணமாக இத்தேர்தலை பயன்படுத்த முனைகின்றனர். காரணம் நேரடியானதொரு மாகாணசபைத் தேர்தலிலோ, பாராளுமன்றத் தேர்தலிலோ ஒட்டுமொத்த கிழக்கு மக்களிடம் களமிறங்கி தமது பலத்தினை பரீட்சிப்பதைவிட மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் இவ்வுள்ளுராட்சித் தேர்தல்களை பொருத்தமானதொன்றாக அவர்கள் கருத இடமுண்டு. அதுமட்டுமன்றி தமது கட்சிக்குள் ஏற்பட்டிருந்த உள்கட்சி முரண்பாடுகளை கடந்து செல்லுவதற்கும் கட்சியின் சகல மட்டங்களிலும் ஒரேவித இணக்கப்பாட்டையும் கூட்டுப்பொறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கும் தேர்தலை எதிர்கொள்ளுவது எனும் கருத்தொருமிப்பு அவர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையவும் கூடும்.
இவற்றுக்கெல்லாம் அப்பால் 1994 ஆம் ஆண்டில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தலே நடத்தப்படவில்லை என்பதுவும், 2004 இல் அதை நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மட்டுமே அது சாத்தியமானது என்பதுவும் இன்றைய நிலையில் தமிழ் பிரதேசங்களில் அத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனும் அவசியநிலையை தோற்றுவித்துள்ளது. இதன்காரணமாக ஜனநாயகத்தின் மீட்சியையையும் மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் தலைமைகளின் வரவையும் வரவேற்கும் எல்லோரும் தேர்தல்கள் நடத்தப்படுவதை ஆதரிக்கின்றார்கள். அந்தவகையில்தான் கிழக்கிலங்கை ஜனநாயக சக்திகளும் அவைசார்ந்த அமைப்புகளும் தேர்தல்கள் நடாத்தப்படுவதை வரவேற்றிருக்கின்றார்கள்.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டக்களப்பில் நடாத்தபட போகின்ற இத்தேர்தல்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது தெள்ளத்தெளிவானது. இயல்பாகவே தேர்தல் என்பதே அவர்களுக்கு ஏழாம் பொருத்தமானது. மக்களின் விருப்பங்களையோ, தெரிவுகளையோ அவர்கள் ஒருபோதும் மதித்ததே இல்லை. தங்களைத் தாங்களே ஏக பிரதிநிதிகளாக அறிவித்துக்கொண்டவர்கள் அவர்கள். ஆகவே முடிந்தவரை தேர்தல்களைக் குழப்புவதற்காக தங்களால் ஆன அனைத்தையும் அவர்கள் மேற்கொண்டேயாகுவர். மேலும் கிழக்கு மாகாணமக்கள் குறிப்பாக படுவான்கரை மக்கள் கடந்தவருடம் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவிட்டு புலிகளைக் அம்போவென கைவிட்டுவிட்டு எழுவான்கரைப் பகுதியை நோக்கி லட்சக் கணக்கில் இடம்பெயர்ந்திருந்தமையும் இதன்காரணமாகவே மக்களை கேடயமாகப் பயன்படுத்தும் புலிகளின் தந்திரோபாயம் நிறைவேறாமல் போனமையும் புலிகளை தீராக்கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. புலிகள் கிழக்கை விடடு புறமுதுகுகாட்டி ஓடவேண்டி வந்தமைக்கு படுவான்கரை மக்களே காரணமென புலிகளின் பெருந்தளபதிகளான பானு, ரமேஸ், ராம் போன்றோர் வன்னியில் போய் பொருமியிருந்தனர்.
எனவே சுமார் 15 வருடங்களாக கொக்கட்டிச்சோலையில் பறந்த புலிக்கொடி இன்று இறக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அங்கே ஒரு மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பிரதேசசபை இயங்க இருப்பதை புலிகள் ஒருபோதும் விட்டுவைக்க நினைக்கமாட்டார்கள். ஆகவே தம்மால் முடிந்தவரையில் தேர்தல் நிலைமைகளைக் குழப்பவும், இனவிரிசல்களை ஏற்படுத்தவும் முனைவார்கள் என்பது திண்ணம். இன்னுமொரு புறம் தமது அரசியல் பினாமிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது மட்டக்களப்பு மக்கள் அண்மையில் நடாத்திய நம்பிக்கையில்லாப் பேரணியினாலும் அவர்களைத் தேர்தலில் இறக்கும் வாய்ப்புக்கள் இல்லாது போயுள்ளது. ஆகவேதான் கூட்டமைப்பினரைக் கொண்டு தேர்தலுக்கான தடை உத்தரவைக் கோரி புலிகள் உச்சநீதிமன்றம் வரை சென்றும் முயன்று பார்த்தனர். அவ்வகையிலும் புலிகள் தோல்வியையே தழுவினர். இதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கொண்டுள்ள பாசப்பிணைப்பில் முஸ்லிம் காங்கிரசின் (கண்டி) தலைமையும் அவர்களைத் திருப்திப் படுத்த தேர்தல்கள் வைப்பதற்கான சூழல் இல்லையென்று ஓயாது பிரசங்கித்து வருகிறார்.
இவை அனைத்தும் ஒருபுறமிருக்க ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ள இயக்கங்கள் கூட (ரி.எம்.வி.பி. தவிர) தேர்தல்கள் நடாத்தும் சாத்தியமில்லை என்கின்ற கருத்தையே ஆரம்பத்தில் வெளிக்காட்டினர். ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் பிரதிநிதிகளில் ஒருவரான துரைரெட்ணம் பி.பி.சி. இக்கு வழங்கிய செவ்வியில் மட்டக்களப்பில் தேர்தல்கள் நடாத்தக்கூடிய பாதுகாப்பான சூழ்நிலை இல்லையென கருத்துத் தெரிவித்தார். அதேபோல் ரி.எம்.வி.பி. இற்கு எதிராக அவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற ஈ.பி.டி.பி., புளொட் ஆகிய அமைப்பின் தலைவர்கள் கூட்டாக விடுத்திருந்த அறிக்கைகளும், மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு அனுப்பியிருந்த மகஜரும் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்பதனையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. இதன்காரணம் என்ன என்பதுதான் இங்கே எழுகின்ற முக்கிய கேள்வியாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் பல தேர்தல்கள் நடாத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் எல்லாம் இம்மாற்று இயக்கங்கள் முன்னின்றும் பங்கெடுத்தும் வந்திருக்கின்றன. 50, 100 வாக்குகளுடனேயே எம்.பி.யாகி அமைச்சராகக் கூட ஈ.பி.டி.பி.யினர் உருவாகிய வரலாறுகள் எல்லோரும் அறிந்ததே. அப்படியிருக்க இத்தேர்தலை மட்டும் இயல்புநிலை இல்லையெனக் காரணம் காட்டி இவர்கள் மறுதலிக்க முனையும் காரணம் என்ன?
புலிகளுக்கு எதிரான மாற்று அரசியல் அரங்கில் இவ்வியக்கங்கள் எல்லாம் இதுவரை காலமும் தனிக்காட்டு ராஜாக்களாகவே இருந்து வந்தன. ஆனால் இன்று கிழக்கில் இருந்து இவர்களுக்குப் போட்டியாக புதியதொரு அரசியல் சக்தி எழுந்து நிற்கின்றது. வட கிழக்கு மாகாணசபை தேர்தல் நடந்த காலங்களிலோ, தீவுப்பகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்ற காலங்களிலோ தமது வெற்றிகளை முன்கூட்டியே உறுதிசெய்யக்கூடிய சூழல் இவர்களுக்கு வாய்த்திருந்தது. ஆனால் இன்றைய கிழக்கின் நிலை வேறு. கிழக்கிலே வேர்கொண்டு கிழக்குத் தலைமையுடன் அங்கு உருவாகியிருக்கின்ற பிரதேச ரீதியிலான கட்சியானது இவர்களுக்கு பலமான போட்டியாக இருக்கக் கூடும். இதன்காரணமாகவே இம்முக்கூட்டு முன்னணியினரும் இத்தேர்தலை முகம்கொள்ளத் தயங்கினார்கள். ஆனாலும் தேர்தல் நடந்தே தீரும் என்கின்ற நிலையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்ட போது தேர்தல் நடத்தப்படக் கூடாது என கூறிக்கொண்டிருந்த இவர்கள் முண்டியடித்துக்கொண்டு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். மக்களின் நலனே அன்றி தமது சொந்தக் கட்சிகளின் நலனில் அக்கறைகொண்டதினூடாகவே இத்தகைய இரட்டை நிலைப்பாட்டை இவர்கள் எடுத்திருக்கின்றார்கள். இதனூடாக அப்பட்டமான ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியாக மேற்படி புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.பி.டி.பி. ஆகியன தம்மை வெளிக்காட்டியுள்ளன எனக்கொள்ளலாமா?