என்றுமில்லாதவாறு மட்டக்களப்பு மக்கள் இம்முறை நடக்கவிருக்கின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் சுதந்திர இலங்கையின் தேர்தல் வரலாற்றின் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்திலிருந்து முதலாவது அரசியல் கட்சி தோற்றம் பெற்றுள்ளது. அந்தவகையில் கிழக்கிலங்கை அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய காலகட்டம் இதுவாகும் என கருதப்படுகின்றது.
இலங்கையின் அரசியல் கட்சிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பிரிட்டிஸாரின் ஆட்சியின் இறுதிக்காலக் கட்டங்களில் இருந்தே உருவாகத் தொடங்கியது. தேசியகாங்கிரஸ் எனும் அமைப்பு இன வேறுபாடுகளற்ற முறையில் 1919 ஆம் ஆண்டு உருவானது. ஆனாலும் 1923 ம் ஆண்டு அதன் தலைவராக இருந்த பொ.அருணாசலம் அவ்வமைப்பிலிருந்து பிரிந்து தமிழர் லீக் எனும் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பின் உருவாக்கத்தின் பின்னர் இனரீதியான அரசியல் இலங்கையில் உருகொள்ள தொடங்கியது. மறுபுறம் 1935 ம் ஆண்டு லங்காசமாசமாச கட்சி எனும் ஒரு இடதுசாரி அமைப்பு உருவாக்கப்பட்டது. இக்கட்சி ஆனது ரஸ்ய புரட்சியின் பின்னர் உலகெங்கிலும் உருவான கம்யூனிச கொள்கையினடிப்படையில் தனது இன, மத, சாதி, பால் பேதமற்ற வகையில் தொழிலாளர்களை அணிதிரட்டியது.
இவ்வடிப்படையில் நோக்குமிடத்து இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் இருவகை கருத்தியல்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தின எனலாம். உன்று லங்கா சமாசமாசகட்சி, கம்யூனிஸ் கட்சி போன்றவை முன்வைத்த இடதுசாரி கருத்தியல் ஆகும். மற்றையது தமிழ், சிங்கள உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட இனவாத கட்சிகள் ஆகும். இதில் சிங்கள மக்களிடையே யூ.என்.பி. மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி போன்றவையும் தமிழ் பகுதிகளில் தமிழ் காங்கிரஸ் (1944), தமிழரசுகட்சி (1949), தமிழர் விடுதலைக் கூட்டணி (1976) என்றும் பார்க்கலாம். இத்தகைய கட்சிகள் எல்லாம் என்னதான் இனஉணர்வு, இனவிடுதலை பேசினாலும் கட்சிதலைமையை ஒருபோதும் கீழ்மட்ட மக்களை சென்றடைய விடவில்லை. தமிழ் கட்சிகளை பொறுத்தவரை அவற்றின் தலைமைப்பீடங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியார் ஒருவரால் அலங்கரிக்க அனுமதிக்கவில்லை. அதுமட்டுமன்றி ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சியுடன் பேரம் பேசி பெற்றுக்கொள்ளும் அமைச்சர் பதவிகளும் யாழ்ப்பாணத்தவர்களாலேயே அலங்கரிக்கப்பட்டது.
தேர்தல் அரசியல் வாதிகள்தான் இப்படி என்றால் தமிழீழம் பெற்றுதர புரட்சிசெய்கின்றோம் என புறப்பட்டவர்களும் அதனால் தோற்றம் பெற்ற இயக்கங்களும் இந்த எழுதாத விதியை விட்டு விலகவில்லை. எல்லா இயக்கங்களின் தலைமைகளும் யாழ்ப்பாணத்தவர்களாக இருந்ததும் கசப்பான ஆனால் நினைவு கூரப்படவேண்டிய உண்மையாகும்.இன்றைய நிலையில் இயக்கங்கள் தொடங்கி முப்பது வருடங்ககால வளர்ச்சியின் பின்னர் கூட கிழக்குமாகாணத்திலிருந்து ஒருவரையாவது எந்தவொரு இயக்கமும் தலைவராக்க முடியாத மனநிலையே காணப்படுகின்றது. இதை என்னவென்று சொல்வது? இதுபோன்ற வர்க்கவிடுதலை, இனவிடுதலை, தேசியவிடுதலை என்கின்ற சொல்லாடல்கள் எல்லாம் மக்களை ஏமாற்றியதனாலேயே அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டங்களிடமிருந்து சிறு சிறு அரசியல் கட்சிகளின் தோற்றம் அதிகரித்து வருகின்றது. உதாரணமாக இன்று மலையக மக்களை அடிப்படையாக வைத்து பல கட்சிகளும் தென்னிலங்கையில் இருந்து றுகுணு, பூமிபுத்திர போன்றவையும் கொழும்பை அடிப்படையாகக் கொண்டு மேல்மாகாண மக்கள் முன்னணி, என்றும் பல்கிபெருகுகின்றன. மறுபுறம் தமிழ் அரசியலில் நம்பிக்கையற்று தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே பல கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் தொடங்கிவைத்த அரசியலின் தொடர்ச்சியாக இன்று அவை பல கட்சிகளாக வியாபித்து நிற்கின்றன. இன்னிலை எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால் அரசியல் விழிப்புணர்வு பெற்றுவரும் மக்கள் கூட்டமாக இலங்கை மக்கள் மாறிவருவதுவும், பெரும் கதையாடல் கட்சிகள் மக்களை தொடர்ந்து ஏமாற்றி பிழைப்பு நடத்திவந்தமையின் விளைவுமே இது என்பதையாகும். இன்னிலையில்தான் பெரும் கோசங்களை விடுத்து அகலகால்பதிக்காமல் கிழக்கின் தனித்துவம், கிழக்கின் உரிமை, கிழக்கின் அபிவிருத்தி எனும் சிறிய எல்லைக்குள் நேரடியாக பங்கெடுக்க கிழக்கிலிருந்து முதல்கட்சியாக ரி.எம்.வி.பி. தோற்றம் பெற்றுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மக்களின் அமோக ஆதரவை கிழக்கின் முதற்கட்சியாகிய தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (ரி.எம்.வி.பி.) பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.