ஆளும் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட ரி.எம்.வி.பி. எடுத்திருக்கும் முடிவானது பல்வேறு கிழக்கிலங்கை புத்திஜீவிகளினாலும் சமூக நிறுவனங்களினாலும் வரவேற்கப்பட்டுள்ளது. அதேவேளை ஆளும் கட்சி ஒன்றுடன் கூட்டுச்சேரலாமா? எனும் அதிருப்தியினை மக்களிடம் ஏற்படுத்துவதில் ஒருசில ஊடகங்கள் முனைப்புக்காட்டிவருவதையும் அவதானிக்க முடிகிறது.
எதிர்காலம் குறித்த அரசியல் பாதையை வகுத்துக்கொள்வதற்கு கடந்தகால வரலாற்றை கற்றுக்கொள்ளுதலும் நிகழ்காலத்தினை பகுத்தறிவதும் அவசியமானதொன்றாகும் அந்தவகையில் சிறுபான்மை இனமான தமிழர் தரப்பில் உருவாகிய கட்சிகள் "ஆளும் கட்சியுடன் கைகோர்த்தல்" எனும் அரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் எப்படி அணுகி வந்துள்ளன? அந்த அணுகு முறைகள் எமது மக்களுக்கு ஏற்படுத்திய அனுகூல, பிரதிகூல விளைவுகள் யாவை? என்பதையிட்டெல்லாம் ஒரு மீளாய்வு இன்றைய சூழலில் அவசியமாயுள்ளது.
தமிழர்களின் தேர்தல் அரசியல் வரலாற்றில் பெரும் முத்திரை பதித்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்றோர் தமிழர்களுக்கான தனிக்கட்சியை நோக்கி மக்களை அணிதிரட்டியவர்களாகும். இவர்களே தமது அரசியல் பேச்சுக்களிலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் ஆளும் கட்சியுடன் கைகோர்க்கும் அனைவரையும் தமிழின துரோகி என்று குற்றம்சாட்டும் வரலாற்றை தொடங்கிவைத்தவர்களாகும். அதேவேளை தேர்தல்கள் முடிந்த மறுகணமே தாங்கள் துரோகம் என சுட்டி மயிர்கூச்செறிய திட்டித் தீர்த்த ஆளும்கட்சியுடன் சேருவதிலோ அமைச்சுப் பதவி பெறுவதிலோ இத்தலைவர்கள் விதிவிலக்காக இருக்கவில்லை.
1947 ஆம் ஆண்டு காலத்தில் ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியில் அமைச்சராக இருந்த மகாதேவா என்பவர் தமிழ் அரசியல் முன்னோடிகளில் ஒருவராகும். இவரை தமிழினத் துரோகி என்று கூறியே 1947 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஜீ.ஜீ.பொன்னம்பலம் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அந்தப் பிரச்சாரமே பொன்னம்பலத்தை தமிழ் மக்களின் மீட்பராக மாற்றி அவருக்கு வெற்றி வாய்ப்பையும் ஈட்டித்தந்தது. ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பொன்னம்பலமும் டி.எஸ்.சேனநாயக்காவின் அரசாங்கத்தில் இரண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு பங்கெடுத்தார். இதேபோன்றுதான் பொன்னம்பலத்தினுடைய இந்தச் செயல்களை செல்வநாயகம் கடுமையாக எதிர்த்தார்.
அரசுடன் இணைவதால் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத்தர முடியாது என்று பிரச்சாரத்தில் இறங்கிய செல்வநாயகம் 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனி அரசுதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற கோரிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்டார். செல்வநாயகம் தோற்றுவித்த தமிழரசுக்கட்சி மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று தேர்தலில் வெற்றிகண்டது. ஆனால் இந்த துரோகக் குற்றச்சாட்டுகளும், நடைமுறைச்சாத்தியமற்ற கோரிக்கைகளும் அடங்கிய வீரச்சவடால்களும் தேர்தலில் வெற்றிபெறும் உத்தியாக மட்டுமே இவர்களுக்கு கைகொடுத்தது. அதற்கு அப்பால் மக்களின் மேம்பாட்டுக்காக இவை எதுவும் பயன்படப்போவதில்லை என்பதினாலேயே தனி அரசுக் கோரிக்கையுடன் களமிறங்கிய செல்வநாயகம் தேர்தலின் பின் பிரதமராகிய பண்டாரநாயக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டு ஆளும் கட்சியுடன் சமரசத்துக்கு வரமுயன்றார். அதுமட்டுமல்ல 1961 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சத்தியாக்;கிரகப் போராட்டம், தனி அரசு தபால்சேவை என்று வடகிழக்கு எங்கும் அரச நிருவாகத்தை ஸ்தம்பிதம் அடையச்செய்த தமிழரசுக் கட்சியினர் தனிநாடு ஒன்றை பிரகடனப்படுத்தாத குறையாக மக்களிடம் பெரும் கனவுகளை விதைத்தனர்.
ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே 1965 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்ற டட்லி செனநாயக்காவின் யு.என்.பி. அரசில் பங்கெடுத்தனர். இதன் மூலம் தமது உயிர்மூச்சுக் கோரிக்கைகள் அனைத்தையும் காற்றிலே பறக்கவிட்டு கொழும்புக் கனவான் திருச்செல்வத்தை அமைச்சராக்குவதில் திருப்தி கண்டனர்.
இந்த வரலாற்றுத் தகவல்கள் எல்லாம் நமக்கு கற்றுத் தருவதென்ன? பெரும் தலைவர்கள் எனப்பட்ட அனைவருமே தமக்கு வாய்ப்பில்லாத, வாய்ப்புக்கிட்டாத பொழுதுகளில் எல்லாம் ஆளும் கட்சியுடன் சேருவதை தமிழினத் துரோகமாகக் காட்ட முனைந்தனர். இந்தக் கோசங்களினூடு பெற்றுக்கொள்ளும் வெற்றிகளை வைத்து வாய்ப்;புக்கிடைக்கின்ற போதுகளில் எல்லாம் ஆளும் கட்சியுடன் சேருவதினூடாகவே மக்களுக்கு எதையாவது செய்யமுடியும் என்பதை நன்கே புரிந்திருந்தனர்.
வெற்றுக் கோசங்களும் வீரப்பிரதாபங்களும் மக்களுக்கு அழிவுகளையும் ஆற்றாமைகளையும் மட்டுமே பெற்றுத்தரும் என்பதே இந்தவரலாறுகள் பெற்றுத்தரும் பாடம். இந்தப் புரிதல்களோடுதான் இன்று ரி.எம்.வி.பி. எடுத்திருக்கும் ஆளும் கட்சியுடன் கூட்டுச்சேரும் முடிவையும் நாம் ஒப்பு நோக்க வேண்டும். தேர்தல்களுக்கு முன்னர் மக்களை ஏமாற்றும் வேடம் அணிந்துவிட்டு தேர்தல் வெற்றியின் பின்னர் ஆளும் கட்சியுடன் கூட்டுச்சேர்வதென்பதே கபடத்தனமான அரசியலாகும். இதனையே இதுவரையான தமிழ் தலைமைகள் அனைத்தும் கைக்கொண்டு வந்தன. ஆனால் எதைச் செய்யப்போகின்றோமோ அதையே மக்களிடம் சொல்லி வாக்குக் கேட்கும் துணிச்சலும் நேர்மையும் ரி.எம்.வி.பி. க்கு வாய்த்திருக்கின்றது. யுத்தத்தினால் சீரழிந்து கிடக்கும் கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப இதைத் தவிர வேறுவழியில்லை.
அதுமட்டுமன்றி தனித்தமிழ் அரசியல் பாரம்பரியங்கள் இதுவரை சாதித்தது என்ன? கிழக்கின் ஒற்றுமையை சீர்குலைத்ததைத் தவிர வேறு எதையும் தமிழ் இனவாத அரசியல் சாதிக்கவில்லை. ஆகவே மட்டக்களப்பு தமிழர்கள் முஸ்லிம்களோடும், சிங்களவர்களோடும் ஐக்கியப்பட்டு கூட்டாக வாழ ரி.எம்.வி.பி. இன்று முன்கையெடுத்திருப்பதாகவே ஆளும் கட்சியினுடனான கூட்டைக் கருத வேண்டும். பல்லின மக்கள் சேர்ந்து வாழும் மட்டக்களப்பு வாக்காளர்கள் இனங்களிடையேயான ஐக்கியத்துக்கு பலத்த சவால் எழுந்துள்ள இன்றைய நிலையில் இச்சவால்களை முறியடிக்க இத்தேர்தலை பயன்படுத்த முன்வரவேண்டும்.